ஒரு பையன் எதற்கெடுத்தாலும் மிகவும் கோபப்படுபவனாக இருந்தான். அவன் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் அவனது வீட்டார் மற்றும் சுற்றத்தாரைப் பெரிதும் காயப்படுத்தின. பையனின் நிலையை மாற்ற விரும்பிய அவனது தந்தை, அவனிடம் ஒரு சுத்தியல் மற்றும் பை நிறைய ஆணிகளை தந்து, “உனக்கு எப்பொழுதெல்லாம் கோபம் வருகிறதோ அச்சமயம் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் மரவேலியில் இந்த ஆணிகளை அடித்து விடு.” என்று கூறினார்.
பையனும் தந்தை கூறியவாறே செய்து வந்தான்.பையிலுள்ள ஆணிகள் விரைவில் தீர்ந்து போயின. தந்தை அடுத்த ஆணிகள் நிறைந்த பையைப் பையனிடம் கொடுத்தார். இவ்வாறு தொடர்ந்து செய்து வருகையில் தனது கோபம் குறைந்து,உணர்வுகள் கட்டுப்பாட்டிற்குள் வருவதை பையன் உணர்ந்தான். பின்னர் அதை அவனது தந்தையிடம் தெரிவித்தப் பொழுது, அவன் தந்தை,”இப்பொழுது நீ மரவேலியில் அடித்த ஆணிகளை எடுத்து விடு.” என்று கூறினார்.
தந்தை கூறியவாறு அடித்த அத்தனை ஆணிகளையும் எடுக்கையிலும் கூட, பையனுக்குக் கோபம் ஏற்படவில்லை; இதையும் கவனித்த தந்தை, தனது பையனை அழைத்து, “இப்பொழுது உன் கோபம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. ஆனால், நீ ஒரு விஷயத்தை கவனித்தாயா?”என்று கூறி, வண்ணம் தீட்டிய மரவேலியைக் காட்டி, அதில் நீ அடித்த ஆணிகளை நீக்கிய பின்பு ஏற்பட்டுள்ள துளைகளைக் கவனித்தாயா? என்ன தான் வண்ணம் தீட்டி இருப்பினும் அத்துளைகள், மரவேலியின் அழகை குலைக்கின்றன.இதுபோல்தான் முதலில் நீ கோபப்பட்டு,தற்பொழுது அந்தக் குணத்தை விட்டு மீண்டு வந்திருந்தாலும் நீ பேசிய கோப வார்த்தைகளால் மற்றவர் மனதில் ஏற்பட்ட காயம் இத்துளைகள் போலவே ஆறாமல் இருக்கும். ஆகையால் இது போன்ற ஒரு தவறை இனி என்றும் உன் வாழ்நாளில் செய்யலாகாது.” என்று அறிவுரை கூறினார்.
No comments:
Post a Comment