பள்ளிக்கூடம் பேசுகிறேன் .....கவிதை



பள்ளிக்கூடம் பேசுகிறேன் என்ற தலைப்பில் கவிதை முழுவதும் படித்துப் பாருங்கள் கண்களில் கண்ணீர் கசியலாம்.....




_பள்ளிக்கூடம் பேசுகிறேன்_




பலரும் கூடும்

பள்ளிக்கூடமாய்

இருந்த நாங்கள்....

பாவிகள் தேடும்

பாழடைந்த மண்டபமாய் கிடக்கிறோம்




பள்ளிக்கூடத்தை

பார்த்துதான் பிள்ளைகள் ஏங்கியிருக்கிறார்கள்...

ஆனால்

இன்று தான்

பள்ளிக்கூடமே! பிள்ளைகளை பார்த்து ஏங்குகிறது....




பூக்களாய் பிள்ளைகளும்

செடிகளாய் நாங்களும்

சேர்ந்து பூந்தோட்டமாக இருந்தோமே ...

இன்று

பூக்கள் இல்லாமல்

வெறிச்சோடி போயிருப்பதைக் கண்டு

நெஞ்சம் தாங்கலையே....




நீரில்லாமல் தான்

மரம் வாடுகிறது,

செடி செத்துக்

கொண்டிருக்கிறது என்று

எல்லோரும்

நினைப்பார்கள்....

ஆனால்

எங்களுக்குத் தானே

தெரியும்

பிள்ளைகள் இல்லாமல்தான்

மரம் வாடி கொண்டும்

செடிகள் செத்துக் கொண்டும்

இருக்கிறது என்று....




பிஞ்சு பாதங்கள் ஓடியாடி விளையாடிய மைதானத்தில்

புழு பூச்சிகள்

விஷ ஐந்துக்கள்

சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து

நெஞ்சம் தாங்கலையே..!




மதியம் ஆனதும்

பிள்ளைகள்

உண்ணும்போது

இறைக்கும்

உணவிற்கு வரும்

பறவைகள்......

ஐயோ!..இன்னும்

எத்தனை நாளைக்குத்தான்

ஏமாந்து போகுமோ...?




கேட் திறக்கும் சத்தமென்று

ஓடி வந்து பார்க்கும் போது....

அது பறவை

கீச்சிட்ட சத்தமென்று

அறியும் போது

இதயம்

ஆயிரம் சுக்காய் அல்லவா

உடைந்து போகிறது...!




எங்களை

கல்லால்

கட்டியபோது கூட

தாங்கிக் கொண்டோமே....

இறைவா.....

இந்த சின்ன பூட்டின் எடையை தாங்க முடியவல்லையே....!




பிள்ளைகள் இல்லாமல்

பெஞ்சுகள்

காலியாக இருந்தாலும்......

அவர்கள்

பேசிய வார்த்தைகளும்

சிரித்த சிரிப்புகளும்

போட்ட சண்டைகளும்

சிந்திய கண்ணீர் துளிகளும்

இன்னும் அப்படியேதான்

நிறைந்திருக்கிறதே.....

அதைப்

பார்த்துப் பார்த்து

எங்கள் இரத்தம்

உறைந்திருக்கிறதே....




கடைசியாக கரும்பலகையில்

எழுதப்பட்ட

எழுத்துக்களையே

இன்னும்

எத்தனை நாளைக்கு தான்

தொட்டுத் தொட்டுப்

பார்த்து

கதறி அழுவதோ....?




பிள்ளைகளைப்

பத்து மாதம்

கருவறையில் சுமந்த

தாய்க்கே....அவ்வளவு

பாசமென்றால்....

நாங்களோ ....!

பத்து பன்னிரண்டு ஆண்டுகளே! பள்ளியறையில் சுமந்து இருக்கிறோமே

எங்கள் பாசம் எவ்வளவு பெரிதென்று யாரறிவாரோ?




பள்ளி திறக்கும் தேதி

குறிப்பிடடுச் சொல்லி

பூட்டியிருந்தால் கூட

நெஞ்சுக்கு

ஆறுதல் சொல்லித்

தேற்றியிருப்போமே! ஐயோ!

எந்த சேதியும்

சொல்லாமல் அல்லவா

பூட்டி விட்டார்கள்..

எதைச் சொல்லி

என் மனதை

தேற்றுவோம்......!




பெல்லில் கூடு கட்டிய

குளவியும்....

ஆங்காங்கே

வலை பின்னும்

சிலந்தியும்

எங்கள் வலியை

உணர முடியாதது போல்.....

அந்த கொரனோ வைரஸ்சும்

உணரப் போவதில்லை

எங்கள் வேதனையை....!




நீங்கள்

நலமோடு இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையோடு தான்

கடைசியாக

நீங்கள் விட்டுச்சென்ற

உங்கள் காலடி சுடுகள் மீது

நடந்து கொண்டிருக்கிறோம்

கசியும் கண்ணீரோடு....




நாம் வைத்த மரம் செடி கொடியும்

தண்ணீர் இல்லாமல்

செத்து விடுமோ என்று

கவலைப்படாதீர்கள்....

நீங்கள் வரும்வரை

அவற்றையெல்லாம்

காப்பாற்றுவோம்

வடியும் எங்கள் கண்ணீரில்.....




யாரோ வரும்

காலடி ஓசை கேட்கிறது .....

சரி நாங்கள் போய் வருகிறோம்

அது ....

எங்களைப்

பார்க்க வந்த

ஒரு மாணவனாக

மாணவியாகக் கூட

இருக்கலாம்......!




நன்றி!

No comments:

Post a Comment

1-5 classes Math games collection for kids

 தொடக்க நிலை மாணவர்களுக்கான கணித விளையாட்டுகள் தொகுப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மிகவும் பயன்தரும் விளையாட்டுகளின் சிறப்பான தொகுப்பு